ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் மகள் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகையை திருடிய மர்ம நபர்கள்- கோபி அருகே துணிகரம்

கோபி அருகே ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் மகள் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-10-25 21:53 GMT

கடத்தூர்

கோபி அருகே ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் மகள் திருமணத்துக்காக வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற பேராசிரியர்

கோபி அருகே உள்ள மொடச்சூரை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவர் கோபியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இவருடைய மகள் தீபிகா. இவர் பல் டாக்டராக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

தீபிகாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக 100 பவுன் நகையை அர்ச்சுனன் வாங்கி வீட்டில் உள்ள பீரோவில் வைத்து இருந்துள்ளார். மகள் திருமணம் என்பதால் கடந்த ஒரு மாத காலமாக வீட்டில் பெயிண்டிங் மற்றும் மராமத்து பணிகளை செய்து வருகிறார்.

நகையை காணவில்லை

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தீபிகா வழக்கம்போல் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று விட்டார். அர்ச்சுனனும், அவரது மனைவி சபிதாவும் அந்தியூரில் நடந்த உறவினர் வீட்டு் திருமணத்துக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினர்.

பின்னர் வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டின் சமையலறை பகுதியில் இருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அர்ச்சுனன் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு் திறந்து கிடந்தது. அதிலிருந்த 100 பவுன் நகை, பணம், சேலைகளை காணவில்லை. அவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

திருட்டு

இதைத்தொடர்ந்து அவர் மாடியில் இருந்த அறைக்கு சென்று பார்த்தார். அங்குள்ள பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. ஆனால் அங்கு நகை, பணம் எதுவும் இல்லை. இதுகுறித்து அர்ச்சுனன் கோபி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்துகொண்ட மர்ம நபர்கள் சுற்றுச்சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் சமையல் அறை பகுதியில் இருந்த கதவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றுள்ளனர். அதன்பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 100 பவுன் நகை, கல்யாணத்துக்காக வைக்கப்பட்டிருந்த சேலைகள் ஆகியவற்றை திருடியுள்ளனர்.

70 பவுன்

அதைத்தொடர்ந்து வீட்டின் மாடிக்கு சென்று அங்குள்ள அறையில் இருந்த பீரோவையும் திறந்து பார்த்துள்ளனர். ஆனால் அதில் ஒன்றும் இல்லாததால் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக்கொண்டு சுற்றுச்சுவர் ஏறி குதித்து தப்பித்து சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை மட்டும் தவறி சுற்றுச்சுவர் அருகே விழுந்துள்ளது. அந்த நகையை போலீசார் கைப்பற்றினர். இதனால் 70 பவுன் நகையை மட்டு்ம் மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஈரோட்டில் இருந்து மோப்பநாய் வீரா சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிதுதூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 70 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்