திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன - சீமான்

பள்ளி சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் இதயத்தை நொறுக்குகிறது என்று சீமான் கூறியுள்ளார்.;

Update:2025-12-20 11:27 IST

கோப்புப்படம் 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தர்மபுரி மாவட்டம் குடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மணிவண்ணன் 9-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த செய்தி அதிர்ச்சியும் மிகுந்த, மனவேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் பள்ளி சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பன்மடங்கு அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாகப் பள்ளி படிக்கும் சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகள் இதயத்தை நொறுக்குகிறது. கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம் காரணமாக ஒட்டுமொத்த சமூகமும் குற்றச் சமூகமாக மாறிநிற்பதே பாலியல் வன்கொடுமை உட்பட நாட்டில் நடைபெறும் அனைத்து கொடுங்கொடுங்குற்றங்களுக்கும் அடிப்படைக் காரணமாகும்.

அக்கொடுமைகளின் தொடர்ச்சியே தர்மபுரியில் நடைபெற்ற பள்ளி சிறுமி மீதான பாலியல் தொல்லையுமாகும். அதைவிடவும் பெருங்கொடுமை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் துணையுடன் சிறுமியின் பாமர பெற்றோரை ஏமாற்றிக் கட்டப்பஞ்சாயத்துப் பேசி அக்கொடுஞ்செயலை மூடி மறைக்க முயன்றதாகும்.

இக்கொடுமை குறித்த தகவல் வெளிவந்தவுடன் கொதித்தெழுந்த ஊர் பொதுமக்கள் நடத்திய தொடர்ப் போராட்டத்தின் விளைவாக, தற்போது பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட போதிலும், கட்டப்பஞ்சாயத்துப் பேசி குற்றத்தை மறைக்க முயன்ற கயவர்களைத் தப்பிக்க விட்டிருப்பது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் இக்குற்றத்திற்குத் துணை நின்றிருப்பது மன்னிக்க முடியாத கொடுமையாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு தர்மபுரி மாவட்டத்தில் 9-ம் வகுப்பு பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றவாளி மற்றும் அதனை மறைக்கத் துணைநின்ற கயவர்கள் அனைவருக்கும் எவ்வித அதிகார தலையீட்டுக்கும், அரசியல் அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் நேர்மையான, விரைவான நீதி விசாரணை நடத்தி மிகக்கடுமையான தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்