புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் பா.ம.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஈடுபட வேண்டும் - அன்புமணி அறிவுறுத்தல்
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய அங்கீகாரமே வாக்குரிமை தான், அதை எவரும் இழந்து விடக் கூடாது என அன்புமணி தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ளை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணிகள் நேற்று முதல் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வாக்காளர் பட்டியலில் இருந்து 97 லட்சம் பேர் நீக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்கள் தகுதியுடைய வாக்காளர்களாகவே இருக்கக்கூடும். இட மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் , உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய முடியாததால் அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கக் கூடும். அத்தகைய வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களையும், இதுவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாதவர்களையும் படிவம் எண் 6-ஐ நிரப்பிக் கொடுத்து சேர்க்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களை திருத்துவதற்கு படிவம் 8-ஐயும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்து கொள்வதற்காக படிவம் 8ஏ-வையும் நிரப்பிக் கொடுக்க வேண்டும். சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நேற்று தொடங்கிய புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணிகள் அடுத்த மாதம் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இன்றும், நாளையும் உள்பட பல சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த காலக்கட்டத்தில் தகுதியுடைய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க பா.ம.க. நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய அங்கீகாரமே வாக்குரிமை தான். அதை எவரும், எந்த காரணத்திற்காகவும் இழந்து விடக் கூடாது. எனவே, இன்று தொடங்கி ஜனவரி மாதம் 18-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதியவர்களைச் சேர்க்கும் தேனீக்களாக உழைக்க வேண்டும். இது தொடர்பாக பொது மக்களுக்குத் தேவைப்படும் மனைத்து உதவிகளையும் பாட்டாளி மக்கள் கட்சியினர் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.