ஆண்டிப்பட்டி அருகேதறிகெட்டு ஓடிய பஸ்சில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி:பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்

ஆண்டிப்பட்டி அருகே தறிகெட்டு ஓடிய பஸ்சில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார். பஸ்சில் பயணம் செய்த 30 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.

Update: 2023-09-07 18:45 GMT

தறிகெட்டு ஓடிய பஸ்

மதுரையில் இருந்து தேனி நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் புறப்பட்டது. அந்த பஸ்சை தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்த தங்கப்பாண்டியன் (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக வினோத்குமார் என்பவர் இருந்தார். பஸ்சில் 30 பேர் பயணம் செய்தனர். இரவு 11.30 மணியளவில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் பஸ் வந்தது.

இரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் தூக்கத்தில் இருந்து விழித்த பயணிகள் அய்யோ, அம்மா காப்பாற்றுங்கள் என்று அபயகுரல் எழுப்பினர். இதற்கிடையே டிரைவர் பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் பஸ் தறிக்கெட்டு ஓடியது.

டிரைவர் பலி

அப்போது டிரைவர் தங்கப்பாண்டியன் திடீரென பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். ஆனால் பஸ் நிற்காமல் சென்று சாலையோரம் உள்ள தனியார் நிலத்தில் போடப்பட்டிருந்த முள்வேலியில் மோதி நின்றது. இந்த விபத்தில் பயணிகள் யாரும் காயமின்றி உயிர் தப்பினர். இதற்கிடையே பஸ்சில் இருந்து விழுந்த தங்கப்பாண்டியன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தங்கப்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கண்டக்டர் வினோத்குமார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் இருந்துதவறி விழுந்து டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்