வல்லநாடு அருகே,தவறாக மின்அளவீடு பதிவேற்றம் செய்த மின் கணக்கீட்டாளர் பணியிடை நீக்கம்

வல்லநாடு அருகே,தவறாக மின்அளவீடு பதிவேற்றம் செய்த மின் கணக்கீட்டாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-09-24 18:45 GMT

வல்லநாடு அருகே வசவப்பபுரத்தில் உள்ள ஒரு டீக்கடைக்கு ரூ.61 ஆயிரம் மின்கட்டணம் வந்து உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனை தொடர்ந்து தூத்துக்குடி ஊரக உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த கடையில் 7 கிலோ வாட் மின்பளு இணைக்கப்பட்டு பயன்படுத்தி வருவது தெரியவந்தது. மேலும் மின்அளவி மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மின் நுகர்வோர் பெற்ற 2 கிலோ வாட் மின் இணைப்பை விட 4.47 கிலோ வாட் மின்பளு அதிகமாக பயன்படுத்தியது தெரியவந்து உள்ளது.

அதே நேரத்தில் மின்கணக்கீட்டாளர், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்அளவீடு செய்யும் போது, மின்நுகர்வோர் குறைவாக மின்சாரம் பயன்படுத்தி வருவதாக கம்ப்யூட்டரில் தவறாக பதிவேற்றம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கவனக்குறைவு காரணமாக மின்வாரியத்தின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் செயல்பட்டதாக மின் கணக்கீட்டாளர் கோமதி என்ற காந்திமதியம்மாளை பணியிடை நீக்கம் செய்து மின்வாரிய செயற்பொறியாளர் உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்