'நீட்' தேர்வு விலக்கு விவகாரம்: மத்திய அரசின் கேள்விகளுக்கு சட்டரீதியான பதில் தயார் அமைச்சர் பேட்டி
‘நீட்’ தேர்வு விலக்கு விவகாரத்தில் மத்திய அரசின் கேள்விகளுக்கு சட்டரீதியான பதில் தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.;
சென்னை,
தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.25 லட்சம் செலவில் மாணவர்களுக்கான திறன் ஆய்வகம், புதுப்பிக்கப்பட்ட கருத்தரங்கம் மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவற்றை அமைச்சர் திறந்து வைத்தார். கை, கால்களை இழந்த 6 பேருக்கு முதல்-அமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் செயற்கை கை, கால்கள் வழங்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் பேசியதாவது:-
சட்டத்துறைக்கு...
'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் மிக முக்கிய கொள்கை மற்றும் திட்டமாகும். ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு சட்டமன்றத்தில் சட்ட மசோதா தயாரித்து அனுப்பியது. நீண்ட நாட்கள் கவர்னரால் அந்த மசோதா மத்திய அரசுக்கு அனுப்பப்படாத நிலையில் மீண்டும் ஒரு சட்ட மசோதாவை கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி நிறைவேற்றி அனுப்பியது. இவ்வாறு 2 முறை சட்ட மசோதாவை அனுப்பி உள்ளோம். அந்த வகையில் தமிழக கவர்னர் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி அனுப்பிய மசோதாவை, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார். பின்னர் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் இந்த மசோதா, அது சம்பந்தமான சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சகங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டது.
அந்த அமைச்சகங்களின் குறிப்புகளுடன், மத்திய அரசின் மூலம் கவர்னருக்கு கடிதம் அனுப்பப்பட்டு, கவர்னர் மூலம் தமிழக அரசின் சட்டத்துறைக்கு கடந்த 5-ந் தேதி வந்திருக்கிறது.
தேசிய கல்வி கொள்கைக்கு எதிரா?
அந்த கடிதத்தில் உள்ள குறிப்புகளின் படி, இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு சட்டமன்றத்துக்கு உள்ள அதிகாரம் குறித்தும், இந்த மசோதா மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறதா எனவும், தேசிய மருத்துவ ஆணைய சட்டம், இந்திய மருத்துவமுறை தேசிய ஆணைய சட்டம் மற்றும் ஓமியோபதி தேசிய ஆணைய சட்டம் ஆகியவற்றிற்கு முரண்பட்டு அமைந்துள்ளதா என்றும், நீட் தேர்வு தகுதி அடிப்படையிலான தேர்வு எனவும், இது தரமான கல்வி, வெளிப்படைதன்மை, தேசிய தகுதி, மற்றும் நுழைவு தேர்வு ஆகிய வரலாற்று சீர்திருத்தங்களை உறுதி செய்யும் வகையில் உள்ளது எனவும், அதற்கு இந்த மசோதா பாதிப்பை ஏற்படுத்துமா எனவும், நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்துமா? எனவும், அரசியலமைப்பு சட்டம் 14-ஐ இந்த மசோதா மீறுகிறதா என்றும், அரசியலமைப்பு சட்டப்படி செல்லதக்கதா எனவும், தேசிய கல்வி கொள்கைக்கு முரணானதாக அமைந்துள்ளதா? என்பது குறித்தும் விளக்கங்களை கோரியுள்ளது.
சட்டப்பூர்வ பதில் தயார்
தமிழக அரசின் சட்டத்துறை, மத்திய அரசிடம் இருந்து இந்த குறிப்புகளை பெற்றவுடன் தமிழக அரசில் ஏற்கனவே நீட் தேர்வு விலக்கு பெறுவதற்கு ஏற்படுத்திக்கொண்ட முயற்சிகள் மற்றும் தமிழக மாணவர்களின் நலனுக்கு எதிராக எந்த வகையிலான பாதிப்பை இவை ஏற்படுத்துகிறது போன்றவற்றை ஆராய்ந்து, மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கின்ற வகையில் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வக்கீல்கள் கடந்த ஒரு வாரமாக கலந்து ஆலோசித்து அரசியலமைப்பு சட்ட விதிகளில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை சுட்டிக்காட்டி விரிவான ஒரு விளக்கம், சட்ட வல்லுனர்களின் உதவியோடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை ஓரிரு நாட்களில் தமிழக முதல்-அமைச்சரின் ஒப்புதலுக்கு வழங்கப்பட உள்ளது. முதல்-அமைச்சரின் ஒப்புதல் வழங்கப்பட்டவுடன், மத்திய அரசுக்கு சட்டபூர்வமான விரிவான பதில் வழங்கப்படும். தி.மு.க அரசு நீட் விலக்கு பெற வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்காமல் ஒவ்வொரு கேள்விக்கும் சட்டரீதியான பதிலை வழங்கும் என்கிற வகையில் அந்த பதில்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பதில்கள் தமிழ்நாடு மாணவர்களின் நலன்களை காக்கும். தமிழக மக்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யும்..
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவ கல்லூரி 'டீன்' டாக்டர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.