நீட் தேர்வு சற்று கடினமாக இருந்தது

நீட் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.;

Update:2022-07-17 22:03 IST

கோவை மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த நீட் தேர்வை மொத்தம் 5,100 பேர் எழுதினர். இந்த தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை புலியகுளத்தை சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா:-

முதல் முறையாக இந்த தேர்வை எழுதுகிறேன். 720 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. இதில் சில வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. சில வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன. நீட் தேர்வை நன்றாக எழுதி உள்ளேன். இதில் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மாணவி சுசும்னா:-

நீட் தேர்வை எழுதுவதற்காக கடந்த ஒரு மாதமாக பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றேன். நீட் தேர்வை எழுத ஒரு ஆண்டு தேவை. மேலும் 11-ம் வகுப்பில் இருந்து 60 சதவீதம் அளவில் வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. எனவே 11-ம் வகுப்பில் நன்றாக படித்தால் நீட் தேர்வை வெல்லலாம்.

மாணவி அனுஷா:-

நான் ஏற்கனவே கடந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினேன். அதில் 560 மதிப்பெண் பெற்றேன். குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் அரசு இட ஒதுக்கீடு கிடைக்காததால் மீண்டும் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினேன். இதில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.

மாணவர் பிரணவ்:-

நீட் தேர்வை நன்றாக எழுதி உள்ளேன். மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு தேவை. நீட் தேர்வு குறித்து யாரும் பயப்பட வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்