காப்பீட்டு தொகை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை

சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் முழுமையான இழப்பீடு வழங்குவது தொடர்பாக கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Update: 2023-10-25 18:45 GMT

வறட்சியால் பாதிப்பு

சிவங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு நெல் விவசாயம் வறட்சியால் பாதிக்கப்பட்டது. இதையொட்டி பயிர்காப்பீடு தொகையாக ரூ.69 கோடி இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் அரசன் சார்பில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.26 கோடி வறட்சி நிவாரணமாக அறிவிக்கப்பட்டது. இன்சூரன்ஸ் நிறுவனம் முறையாக கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பயிர்காப்பீடு தொகையை வழங்கவில்லை. இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள 54 வருவாய் கிராமங்களில் 12 ஊராட்சிகளுக்கு மட்டும் பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய காப்பீட்டு கிடைக்காமல் அவதி அடைகின்றனர் எனக்கூறி இளையான்குடி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல மாவட்டத்தின் மற்ற இடங்களிலும் காப்பீடு வழங்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

பேச்சுவார்த்தை

இதன் அடிப்படையில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன், மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன், கூட்டுறவுமண்டல இணை இயக்குனர் ஜீனு, குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன் மற்றும் வேளாண்மை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் அய்யாச்சாமி, வக்கீல்ஜான் சேவியர், மாவட்ட விவசாய சங்க செயலாளர் வீரபாண்டி, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆதிமூலம், ராமலிங்கம், சின்னகண்ணு உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

காப்பீட்டு தொகை

கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:- இளையான்குடி ஒன்றியத்தில் 54 வருவாய் கிராமங்கள் இருக்கும்போது 12 ஊராட்சிகளுக்கு மட்டும் பயிர்காப்பீடு கிடைத்துள்ளது. பயிர்காப்பீடு செய்யும்போது இந்தாண்டுக்கு 360 நாட்களுக்கு மட்டும் என கூறினர். ஆனால் இழப்பீடு நிர்ணயம் செய்யும்போது ஐந்து ஆண்டு சராசரியை பார்த்து இழப்பீடு வழங்குகிறார்கள். குறிப்பாக ஒரு இடத்தில் நான்கு ஊர் ஒன்றாக இருந்தால் ஒரு ஊருக்கு மட்டும் பயிர் காப்பீடு கிடைக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இழப்பீடு தொகை ரூ.400 கோடி கிடைத்துள்ளது. ஆனால் சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ.69 கோடிதான் கிடைத்துள்ளது.

எனவே கணக்கீட்டு முறையை மாற்ற வேண்டும். மேலும் பயிர்காப்பீட்டில் உள்ள விதிமுறைப்படி முளைக்காத பயிர்களுக்கு ரூ.2000 தர வேண்டும் என்று உள்ளது. நவம்பர் மாதத்திலேயே பயிர்கள் முளைக்காமல் போய்விட்டது. முளைக்காத பயிருக்கும் காப்பீடு வழங்க வேண்டும். இதுதவிர தமிழக அரசு தனியாக காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றனர்.

அரசுக்கு கோரிக்கை

இதற்கு பதிலளித்து கலெக்டர் ஆஷாஆஜீத் கூறியதாவது:- டிசம்பர் மாதம் சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டது என்ற கணக்கீடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே நவம்பர் மாதத்தில் முளைக்காத பயிர்களுக்கு தரவேண்டும் என்ற விதிமுறைப்படி இழப்பீட்டு தொகை வழங்க காப்பீட்டு திட்டத்திற்கு கோரிக்கை விடுக்கலாம். பயிர்காப்பீடு வழங்கியதில் உள்ள குறைபாடுகளை போக்க இஸ்ரோ நிறுவனத்தின் உதவியுடன் சேட்டிலைட் மூலமாக கணக்கீடு செய்து பரிந்துரை செய்யலாம் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்