ஏ.டி.எம்.மில் தவறவிட்ட ரூ.10 ஆயிரத்தை பெண்ணிடம் ஒப்படைத்த போலீசார்

ஏ.டி.எம்.மில் தவறவிட்ட ரூ.10 ஆயிரத்தை பெண்ணிடம் ஒப்படைத்த போலீசார்;

Update:2023-09-07 00:26 IST


ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 45). இவரின் மனைவி மகேசுவரி (42). இவர்கள் ராமநாதபுரம் ரெயில் நிலையம் நுழைவு வாயில் பகுதியில் உள்ள கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற மகேசுவரி தனது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.10 ஆயிரம் எடுத்துள்ளார். பின்னர் பணம் வைத்த பையை ஏ.டி.எம்.மில் தவறவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு சென்றதும் பணம், ஆவணங்கள் இருந்த பை காணாததை கண்டு மகேசுவரி அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஏ.டி.எம். மையத்திற்குள் சென்றபோது அங்கு பணத்துடன் ஏ.டி.எம். கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் இருந்ததை பார்த்தார். பின்னர் அதை ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரனிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த பை மகேசுவரிக்குரியது என தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை வரவழைத்து தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தனர். பெண் தவறவிட்ட பணத்தை கண்டெடுத்து ஒப்படைத்த சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்