என்.ஐ.ஏ. வழக்கு தொடர்பாக சென்னையில் 4 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை

என்.ஐ.ஏ. வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சென்னையில் 4 பேர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் இந்திய, வெளிநாட்டு பணத்தை லட்சக்கணக்கில் கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-11-16 00:09 GMT

சென்னை,

கோவை கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. இதற்கிடையே என்.ஐ.ஏ. அமைப்பு பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக சந்தேகப்பட்டியலில் இருக்கும் நபர்களை கண்காணித்தல் மற்றும் அவர்களது வீடுகளில் சோதனை நடத்துதல் போன்ற நடவடிக்கைகளில் தமிழக போலீசாரும், என்.ஐ.ஏ. அமைப்பினரும் இணைந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று சந்தேகத்தின் பேரில் 4 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

முத்தையால்பேட்டை போலீஸ் நிலைய எல்லையில் மண்ணடியில் உள்ள ஆருண் ரசீத் (வயது 40) என்பவர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வெளிநாட்டு பணம்

இந்த சோதனையில் இந்திய பணம் ரூ.4.90 லட்சம், ரூ.1,600 மதிப்புள்ள சீன பணம், ரூ.4,820 மதிப்புள்ள தாய்லாந்து பணம், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மியான்மர் நாட்டு பணம் மற்றும் சிங்கப்பூர் நாட்டு பணம் கைப்பற்றப்பட்டது. அவரது வணிக நிறுவனத்தில் ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டது.

மேலும் இந்த சோதனையில் மின்சாதன பொருட்கள், மடிக்கணினிகள், கிரெடிட் கார்டுகள், ஏ.டி.எம். கார்டுகளும் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட மேற்கண்ட பணம், வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதர பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

2 வழக்குகள் பதிவு.

சட்டக்கல்லூரி போலீஸ் நிலைய எல்லையில் முகமது முஸ்தபா (31), ஏழுகிணறு போலீஸ் நிலைய எல்லையில் தவுபிக் அகமது (29), கொடுங்கையூர் போலீஸ் நிலைய எல்லையில் தாப்ரீஸ் ஆகியோரும் சோதனை பட்டியலில் இடம் பெற்றனர்.

குற்றவியல் நடைமுறைசட்டப்பிரிவு 102-ன் கீழ் மேற்கண்ட சோதனைகள் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் குவிப்பு

சட்டக்கல்லூரி, ஏழுகிணறு மற்றும் முத்தையால் பேட்டை ஆகிய போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் பூக்கடை துணை கமிஷனர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் உதவி கமிஷனர்கள் வீரக்குமார், பாலகிருஷ்ணபிரபு, லட்சுமணன் மற்றும் 6 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். பகல் 11 மணி அளவில் சோதனை நிறைவு பெற்றது.

கொடுங்கையூரில் துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில், உதவி கமிஷனர்கள் தமிழ்வாணன், அழகேசன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்