தமிழகத்தில் புதிய மதுக்கடைகள் திறக்கப்படவில்லை -அமைச்சர் முத்துசாமி பேட்டி

தமிழகத்தில் புதிய மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.;

Update:2023-08-22 05:31 IST

ஈரோடு,

ஈரோட்டில் நேற்று தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் சட்டவிரோதமாக ஒரு இடத்திலும் பார் செயல்படுவது கிடையாது. புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க திறந்த மனதுடன் தயாராக இருக்கிறோம். டாஸ்மாக்கில் பணியாற்றும் 2 ஆயிரம் பேருக்கு முதுநிலை அடிப்படையில் பணி இடமாறுதல் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், மது விற்பனை முழுமையாக கணினி மயமாக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 2 மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும். அதன்பிறகு மது பாட்டில்கள் எங்கு வாங்கப்பட்டது, எங்கே கொண்டு செல்லப்படுகிறது என்பதில் இருந்து மது விற்பனை செய்யும் வரை கணினி மூலமாக கண்காணிக்க முடியும்.

திறக்கப்படவில்லை...

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன்பிறகு எங்கும் புதிய கடைகள் திறக்கப்படவில்லை. பிரச்சினை உள்ள கடைகள் மட்டும் இடமாற்றம் செய்யப்படுகிறது. டாஸ்மாக் ஊழியர்கள் வைத்த 49 கோரிக்கைகளில் 39 கோரிக்கைகள் பேசி தீர்வு காணப்பட்டன. சம்பள உயர்வு தொடர்பாக உணர்வுபூர்வமாக போராட நினைக்கின்றனர். ஆனால் சம்பள உயர்வு தொடர்பாக மற்ற துறைகளுடன் சேர்ந்து முடிவு செய்ய வேண்டியுள்ளது.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்