ஒகேனக்கல்லில் இன்று முதல் பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல்லில் இன்று முதல் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-13 04:17 GMT

பென்னாகரம்,

கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் அதிக அளவில் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து அதே அளவு நீடித்து வந்தது. ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க இன்று முதல் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர். மேலும் அவர்கள் மீன்சாப்பாடு வாங்கி பூங்காவில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும் இளைஞர்கள் எண்ணெய் மசாஜ் செய்து ஆற்றின் கரையோரம் இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.

மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை, அருவியில் குளிக்கும் இடம் ஆகிய பகுதிகள் சீரமைக்காததால் குளிக்க மட்டும் தடை தொடர்ந்து நீடிக்கிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்