காஞ்சீபுரத்தில் முதியவர் அடித்துக்கொலை

காஞ்சீபுரத்தில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-07-31 08:57 GMT

கொலை

காஞ்சீபுரம் பழைய ரெயில்வே சாலை கந்தன் பூங்கா அங்கன்வாடி மையப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக தங்கி வசித்து வந்தவர் துரை (வயது 62). இவர் சாலையோரங்களில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களை சேகரித்து விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை துரை மதுபான பாட்டிலால் தலையில் அடித்து கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கைது

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் ரெயில்வே ரோடு வழியாக ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நடந்து வந்த 3 வாலிபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் காஞ்சீபுரம் ரெயில்வே ரோடு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன், சசிகுமார் (26), பேரரசு என்கிற ஜின்னா (19) என்பது தெரியவந்தது. குடிபோதையில் முதியவரை கையால் தாக்கி, பிறகு தலை மற்றும் முகத்தில் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் துரை அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அங்கன்வாடி மைய பகுதியில் அவர்கள் 3 பேரும் மது குடிக்க வந்துள்ளனர். அவர்களிடம் துரை, இங்கே குடிக்க கூடாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் முதியவரை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கொலை நடந்த 8 மணி நேரத்தில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெகுவாக பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்