கந்துவட்டி கொடுமையால் முதியவர் தீக்குளிக்க முயற்சி

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் முதியவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-01-30 18:45 GMT

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் முதியவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

381 மனுக்கள்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

இந்த கூட்டத்தில் மொத்தம் 381 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

தீக்குளிக்க முயற்சி

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள நம்பித்தலைவன்பட்டயம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 80). கூலித்தொழிலாளி. இவர் தன்னுடைய மனைவி சத்தியவாணி, மகன் செல்வன் ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது திடீரென ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை திறந்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட அங்கிருந்த போலீசார், ஆறுமுகத்தை தடுத்து நிறுத்தி, தீக்குளிக்க விடாமல் பத்திரமாக மீட்டனர். பின்னர் ஆறுமுகம் மற்றும் குடும்பத்தினரை விசாரணைக்காக பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து அவர்கள் கலெக்டரிடம் போலீசார் மூலம் மனு கொடுத்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

கடந்த ஓராண்டுக்கு முன்பு எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வட்டிக்கு ரூ.20 ஆயிரம் கடன் வாங்கினோம். இதற்காக வாரந்தோறும் ரூ.2 ஆயிரத்தை வட்டி பணமாக வசூலித்தனர். ரூ.20 ஆயிரம் கடனுக்கு வாரம் 2 ஆயிரம் ரூபாய் வட்டி மட்டுமே செலுத்துவதால் கடனை அடைக்க முடியவில்லை.

கடந்த 4 மாதங்களாக வட்டி பணம் கொடுக்காததால், எங்களது வீட்டுக்கு வந்து கந்துவட்டி ேகட்டு அவதூறாக பேசி மிரட்டுகிறார். இதுகுறித்து ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் மனமுடைந்து தீக்குளிக்க முயன்றேன். எனவே கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்துபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறினார்கள்.

ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு

மானூர் யூனியன் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் சின்னதுரை தலைமையில் கலெக்டர் விஷ்ணுவிடம் மனு அளிக்கப்பட்டது.

அதில், "மானூர் யூனியன் 43 பஞ்சாயத்துகளை கொண்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பணிகளை செயல்படுத்தி வருகிறது. ஆனால் தற்போது அனைத்து பஞ்சாயத்துகளிலும் மக்கள்தொகை அதிகரித்து உள்ளது. அதன் அடிப்படையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும். அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் ஆண்டுக்கு 50 புதிய தெரு விளக்குகள் வாங்கிட அனுமதி தரவேண்டும். ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தை விடுபட்ட பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்த வேண்டும்'' என்று கூறி இருந்தனர்.

சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ``ராமையன்பட்டி பஞ்சாயத்து வேப்பங்குளம் கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய சுடுகாட்டு பாதையை சிலர் முள்கம்பிகளை போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் இறந்தவர் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்ய முடியவில்லை. எனவே இந்த பாதையை மீட்டு தர வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.

இதே போல் பல்வேறு பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

நலத்திட்ட உதவி

இந்த கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் குறைந்த 130 பேருக்கு ரூ.17½ லட்சம் மதிப்பிலான தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் 4 பேருக்கு முடநீக்கியல் சாதனங்களும் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்