சதுர்த்தி விழாவையொட்டி816 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை:பலத்த போலீஸ் பாதுகாப்பு

தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று 816 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட உள்ளது. சிலைகள் ஊர்வலத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2023-09-17 18:45 GMT

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தேனி மாவட்டத்தில் இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.

இதற்கான சிலைகள் தயாரிப்பு பணி தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் இந்து முன்னணி ஏற்பாட்டில் தீவிரமாக நடந்து வந்தது. சிலைகள் வர்ணம் பூசி தயார் நிலையில் இருந்தன. இதையடுத்து நேற்று அங்கிருந்து மாவட்டம் முழுவதும் விழாக்குழுவினர் நேரில் வந்து சிலைகளை வாகனங்களில் எடுத்துச் சென்றனர். அதுபோல், இந்து எழுச்சி முன்னணி சார்பில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து விநாயகர் சிலைகளின் பாகங்கள் அல்லிநகரம் காந்திஜி நகரில் உள்ள ஒரு மில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு பாகங்கள் பொருத்தப்பட்டு சிலைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டன. அங்கு இருந்தும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், திண்டுக்கல், மதுரை மாவட்ட பகுதிகளுக்கும் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன.

816 இடங்களில் பிரதிஷ்டை

மாவட்டம் முழுவதும் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட 816 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. ஒவ்வொரு சிலைகளுக்கும் தலா 4 தன்னார்வலர்கள் மற்றும் ஒரு போலீசார் வீதம் இரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரோந்து வாகனங்களிலும் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்ட சிலைகள் இன்று காலை பிரதிஷ்டை செய்து, கண் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. பின்னர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

ஊர்வலம்

மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் 3 நாட்கள் நடக்கிறது. பெரியகுளத்தில் இன்று ஊர்வலம் நடக்கிறது. தேனி, போடி, கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, தேவாரம், ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு ஆகிய இடங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஊர்வலம் நடக்கிறது. சின்னமனூரில் நாளை மறுநாள் (புதன்கிழமை) விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது.

விநாயகர் சதுர்த்தி மற்றும் சிலைகள் ஊர்வலத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேரடி மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் போலீசார் இந்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தும், பழனி பட்டாலியன் படைப்பிரிவில் இருந்தும் போலீசார் தேனிக்கு பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர்.


களைகட்டிய பூஜை பொருட்கள் விற்பனை

விநாயகர் சதுர்த்தியையொட்டி தேனியில் பூஜைப் பொருட்கள் விற்பனை நேற்று களை கட்டியது. சாலையோரம் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளையும் சிலர் விற்பனை செய்தனர். வீடுகளில் வைத்து வழிபடுவதற்கு மக்கள் அதனை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். மேலும், பூஜைக்கு தேவையான பழங்கள், பூக்கள், வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம், வாழை மரக்கன்றுகள், எருக்கம்பூ மாலை போன்றவற்றின் விற்பனையும் மும்முரமாக நடந்தது. அவல், பொரி விற்பனையும் களைகட்டியது. பொருட்கள் வாங்குவதற்கு தேனி நகரின் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்