ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: கவர்னர் ஒப்புதல் அளிக்காவிட்டால் போராட்டம் -அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Update: 2023-02-15 20:46 GMT

சேலம்,

சேலம் மேற்கு, தெற்கு மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி தாரமங்கலம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் பா.ம.க. மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. இதுவரை 43 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு முழு காரணம் கவர்னர்தான். ஆன்லைன் அவசர தடை சட்டத்திற்கு அனுமதி அளித்தவர், நிரந்தர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது ஏன் என்பது தெரியவில்லை. அவர், அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

தமிழ் ஈழம்

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க அனுமதிக்க மாட்டோம். இந்த மாதம் என்னுடைய தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். உருக்காலையை மத்திய அரசு நடத்த முடியாவிட்டால் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பிரபாகரன் குறித்து பழ.நெடுமாறன் கூறியதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

இலங்கையில் தமிழ் ஈழம் மலர வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை. அதனை உலக தமிழர்கள் ஒன்றுகூடி முடிவு செய்ய வேண்டும். 2026-ம் ஆண்டில் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். அதற்கேற்ற பணிகளை திட்டமிட்டு நடத்தி வருகிறோம். கருணாநிதி மீது எங்களுக்கு அதிக மரியாதை உண்டு. அவர், நினைவிடம் அருகில் பேனா சின்னம் அமைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்