தங்கம்மாள் ஓடையை தூர்வாரி மேம்படுத்தும் பணிகள்
உடுமலை தங்கம்மாள் ஓடையை தூர்வாரி மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
உடுமலை தங்கம்மாள் ஓடையை தூர்வாரி மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தங்கம்மாள் ஓடை
உடுமலை நகரின் மேற்கு பகுதியில் உள்ளது தங்கம்மாள் ஓடை. இந்த ஓடையில், குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் கழிவு நீர் செல்கிறது. உடுமலை நகரை ஒட்டியுள்ள ஒட்டுக்குளம் நிறைந்தால் அதன் உபரிநீர் இந்த ஓடையில் திறந்து விடப்படும்.
அப்போது இந்த ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அந்த காலங்களில் தங்கம்மாள் ஓடைவீதி, சாதிக்நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து விடும்.
இதைத்தொடர்ந்து உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழா நினைவாக உடுமலை நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதி ரூ.48 கோடியே 87 லட்சத்தில், தங்கம்மாள் ஓடையை தூர்வாரி, நடைபாதை அமைத்தல் மற்றும் தடுப்புச்சுவர் கட்டி மேம்படுத்துதல் பணிகளுக்காக ரூ.12 கோடியே 97 லட்சம் ஒதுக்கப்பட்டது.
பணிகள் தீவிரம்
இந்தநிதி ஒதுக்கி, பணிகளை தொடங்க பூமி பூஜை போடப்பட்டு ஒரு ஆண்டாக பணிகள் தொடங்கப்படாமலிருந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு தற்போது இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் முதல் கட்டமாக, ஒட்டுக்குளம் அருகே ஓடைப்பகுதியில் புதர்போன்று வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டு ஓடை தூர்வாரப்பட்டு வருகிறது.
இதன் மூலம் முன்பு குறுகலாக காணப்பட்ட இந்த பகுதியில் ஓடை இப்போது தூர்வாரப்பட்ட பிறகு அகன்ற நிலையில் காணப்படுகிறது. ஓடையை தூர்வாரும் பணிகளைத்தொடர்ந்து, ஓடையின் இரண்டு புறமும் தடுப்புச்சுவர் கட்டப்பட உள்ளது.
இந்த பணிகளை நகராட்சி தலைவர் மு.மத்தீன் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினார்.