சென்னையில் 3 புதிய மகளிர் உடற்பயிற்சிக் கூடங்கள் - மேயர் பிரியா திறந்து வைத்தார்
உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் வார்டு 198-க்கான அலுவலகத்தினை மேயர் பிரியா திறந்து வைத்தார்.;
சென்னை,
சென்னை சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் ரூபாய் 2.58 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 3 புதிய மகளிர் உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் வார்டு அலுவலக கட்டிடத்தினை மேயர் பிரியா திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, மேயர் பிரியா சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் ரூபாய் 2.58 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 3 புதிய மகளிர் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் வார்டு 198-க்கான அலுவலகத்தினையும் திறந்து வைத்தார்.
மேயர் பிரியா சோழிங்கநல்லூர் மண்டலத்தில், மாநகராட்சியின் மூலதன நிதியில், வார்டு-196, கண்ணகி நகர், 12-வது பிரதான சாலையில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மகளிர் உடற்பயிற்சிக் கூடம், வார்டு-199, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இ-36 சாலையில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய மகளிர் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் வார்டு-194, ஈஞ்சம்பாக்கம், வி.ஜி.பி. லேஅவுட் பார்க்கில் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் புதிய மகளிர் உடற்பயிற்சிக் கூடம் என 3 மகளிர் உடற்பயிற்சிக் கூடங்களை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, காரப்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் ரூபாய் 1.33 கோடி மதிப்பீட்டில் வார்டு-198ற்கான அலுவலக கட்டிடத்தினைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், மண்டலக்குழுத் தலைவர் வி.இ.மதியழகன், மாமன்ற உறுப்பினர்கள் க.சங்கர், க.விமலா கர்ணா, லியோ என். சுந்தரம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.