மழைநீர் கால்வாயில் கொசுவலை போடப்பட்ட விவகாரம்: சென்னை மேயர் பிரியா விளக்கம்

மழைநீர் வடிகால்வாய் தொட்டிகளின் மூடியை திறந்து, அதன் உள்ளே கொசுவலை பொருத்தி, பின்னர் மீண்டும் மூடி வைக்கப்பட்டது.;

Update:2026-01-24 21:36 IST

சென்னை, 

வடகிழக்கு பருவமழைக்கு பிறகு சென்னையில் கொசுக்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொசுக் கடியால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுவெளி பகுதிகளிலும் கொசுக்கள் அதிகமாக காணப்படுவதால், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கொசுக்களை ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கவுன்சிலர்களிடமும் இதுகுறித்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், கொசுக்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். மழைநீர் வடிகால்வாய் தொட்டிகளில் கொசுவலை பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக திருவொற்றியூர், திரு.வி.க. நகர் உள்ளிட்ட பல மண்டலங்களில் இந்த பணிகள் நடைபெற்றன. மழைநீர் வடிகால்வாய் தொட்டிகளின் மூடியை திறந்து, அதன் உள்ளே கொசுவலை பொருத்தி, பின்னர் மீண்டும் மூடி வைக்கப்பட்டது. தொட்டிக்குள் இருக்கும் கொசுக்கள் மூடியில் உள்ள துளைகள் வழியாக வெளியேறுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.ஆனால், இந்த முயற்சி சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. இதுதொடர்பான விமர்சனங்களும், கேலி–கிண்டல் வீடியோக்களும் வைரலாக பரவின. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைகை அணையில் தெர்மாகோல் மிதக்கவிட்ட சம்பவத்துடன் ஒப்பிட்டு வீடியோக்கள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், மழைநீர் கால்வாயில் கொசுவலை பொருத்தப்பட்டதற்கு விளக்கம் அளித்துள்ளார் சென்னை மேயர் பிரியா.சென்னை புளியந்தோப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆட்டிறைச்சிக் கூடத்தை ஆய்வு செய்த மேயர் பிரியாவிடம்,“மழைநீர் வடிகாலில் கொசுவலை பொருத்திய வீடியோ வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளதே?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“மழைநீர் கால்வாயில் கொசுவலை பொருத்தப்பட்டது கொசுக்களுக்காக திட்டமிட்டு செய்யப்பட்டது கிடையாது. ஒரு கவுன்சிலர் வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் அந்த இடத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்டது.மாநகராட்சி சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டு செய்யப்படவில்லை. ஒரு கவுன்சிலர் கொடுத்த யோசனையின் பேரில் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு சர்ச்சையாக்கும் வகையில் அது பெரிய விஷயம் அல்ல” என விளக்கம் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்