சிறுமியை திருமணம் செய்த பெயிண்டர், போக்சோவில் கைது

பொள்ளாச்சியில் சிறுமியை திருமணம் செய்த பெயிண்டரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.;

Update:2023-06-01 00:45 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சிறுமியை திருமணம் செய்த பெயிண்டரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுமி மாயம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 6-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சிறுமி சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்று தெரிகிறது. இதை தொடர்ந்து சிறுமியை அக்கம், பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்காததால் பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சிறுமி மாயம் என்று வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சிறுமியை பெயிண்டரான பிரதீபன் (25) என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் அவர்கள் கரூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் கரூருக்கு விரைந்து சென்றனர்.

போக்சோ வழக்கு

அங்கு சிறுமியை திருமணம் செய்து கொண்டு பிரதீபன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறுமியையும், பிரதீபனையும் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெற்றோரை வரவழைத்த போலீசார் சிறுமிக்கு அறிவுரை கூறி அவர்களுடன் அனுப்பி வைத்தனர். பின்னர் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இதே வாலிபர் அந்த சிறுமியுடன் மாயமானார். இதையடுத்து போலீசார் அவர்களை கண்டுபிடித்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தற்போது நிபந்தனை ஜாமீனில் வந்தவர், மீண்டும் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததால் 2-வது முறையாக போக்சோவில் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்