கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம்

மாணவி ஸ்ரீமதியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்தாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-07-21 07:28 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி மர்ம மான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்துக்கு நீதிகேட்டு கடந்த 17-ந்தேதி நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது.

இதனையடுத்து, மாணவி ஸ்ரீமதியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது பெற்றோர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு கடந்த 17-ந் தேதி அன்று விசாரணைக்கு வந்தது.

மாணவி உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அப்போது மாணவி தரப்பில் அவரது தந்தை மற்றும் அவர்களது தரப்பு வக்கீல் உடன் இருக்கலாம், மறு பிரேத பரிசோதனை செய்வதை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆனால், மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் தரப்பில் தங்கள் சார்பில் ஒரு டாக்டரை, மறு பிரேத பரிசோதனையின்போது நியமிக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் 18-ந் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது, மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய போலீசார் ஏற்பாடு செய்தனர்.

ஆனால், மறு பிரேத பரிசோதனை செய்வதற்கு மாணவியின் பெற்றோர் யாரும் வரவில்லை என்று ஐகோர்ட்டில் காவல்துறை சார்பில் முறையிடப்பட்டது. அதற்கு, மாணவியின் உடலை பெற்றோர் இல்லாமலேயே மறு பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும், பெற்றோர் வந்தால் அவர்களை அனுமதிக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவி ஸ்ரீமதி உடலை மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மாணவி ஸ்ரீமதியின் மறுபிரேத பரிசோதனையை தாங்கள் பரிந்துரைக்கும் மருத்துவர்களை கொண்டு செய்யக்கோரி மாணவியின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மறு உடற்கூராய்வு குறித்த தகவல் மாணவியின் பெற்றோருக்கு உரிய நேரத்தில் தரப்பட்டதாகவும் மாணவியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வாதம் முன் வைக்கப்பட்டது.

மறு பிரேத பரிசோதனையை சுதந்திரமான நிபுணரை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரித்து மாணவி விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டை அணுக அனுமதி வழங்கி வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்தாக தகவல் வெளியாகி உள்ளது. மாணவியின் உடலை இன்று இரவே அடக்கம் செய்யப்படும் என பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு உத்தரவிடக்கோரி போலீசார் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்