தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து - மார்ச் மாதம் தொடங்க நடவடிக்கை

தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மார்ச் மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கூறினார். இதுகுறித்து அவர் வ.உ.சி. துறைமுகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

Update: 2023-01-12 00:41 GMT

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு இது முக்கியமான நாள். இங்கு சுற்றுலா பயணிகளுடன் சொகுசு கப்பல் வந்து உள்ளது. இதே போன்று பல சுற்றுலா கப்பல்கள் தூத்துக்குடிக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் தூத்துக்குடி மாவட்டத்துக்கும், மாநிலத்துக்கும் பொருளாதார பலன்கள் மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஒரு பயணிகள் முனையம் மேம்படுத்தப்பட உள்ளது. கொரோனா காலத்தில் சமுத்திரசேது திட்டத்தின் கீழ் மாலத்தீவு, ஈரான், கொழும்பு ஆகிய நாடுகளில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அப்போது தூத்துக்குடி துறைமுகத்துக்கு அவர்கள் அழைத்து வரப்பட்டனர். அந்த சமயத்தில் தற்காலிகமாக ஒரு முனையம் தயார் செய்து இருந்தோம். தற்போது அந்த முனையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி-இலங்கை கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கப்பல் நிறுவனத்தினர் கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். தற்போது 2 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதனால் 2 மாதத்தில் அதாவது மார்ச் மாதத்தில் இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க வாய்ப்பு உள்ளது.

தற்போது மீண்டும் கொழும்பு, கொச்சி, சென்னை ஆகிய இடங்களுக்கு தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல் இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. தற்போது பயணிகள் கப்பல் வந்து இருப்பது ஒரு ஆரம்பம்தான். தொடர்ந்து பல கப்பல்கள் தூத்துக்குடிக்கு வர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்