நாகர்கோவிலில் அரசு பஸ்சுக்குள் குடைபிடித்து பயணித்த பயணிகள்

பஸ்சுக்குள்ளும் மழை பெய்து கொண்டிருந்தது பயணிகளை அதிர்ச்சி அடையச் செய்தது.

Update: 2024-05-24 02:42 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. நேற்றும் இதேபோல் மழை பெய்தது. நேற்று காலை அண்ணா பஸ் நிலையத்துக்கு பஸ்சில் ஏறிச் செல்வதற்காக ஆண்களும், பெண்களும் குடைகளை பிடித்தபடி வந்தனர். அவ்வாறு வந்த பயணிகளில் சிலர் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து திங்கள்நகர் சென்ற பஸ்சில் ஏறினர். பஸ்சுக்குள் ஏறியதும் குடையை மடக்கி வைத்திருந்தனர்.

ஆனால் பஸ்சுக்குள்ளும் மழை பெய்து கொண்டிருந்தது அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. அதாவது பழைய பஸ்சான அந்த பஸ்சின் மேற்கூரையில் இருந்த சிறு, சிறு ஓட்டைகள் வழியாக மழைநீர் சொட்டு, சொட்டாக விழுந்து கொண்டிருந்தது. இதனால் அந்த பஸ்சில் பயணித்த பயணிகள் பஸ்சுக்குள்ளும் குடைகளை பிடித்தவாறு பயணம் செய்தனர். இதேபோல் வேறு சில பஸ்களிலும் மழைநீர் ஒழுகியது. எனவே ஓட்டை, உடைசலான பஸ்களை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்