கோவில் திருவிழா நடத்துவது குறித்து சமாதான கூட்டம்

நிலக்கோட்டை அருகே ஜம்புத்துரைகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஊத்துப்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா நடத்துவது குறித்து சமாதான கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-18 19:30 GMT

நிலக்கோட்டை அருகே ஜம்புத்துரைகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஊத்துப்பட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக கிராம மக்களிடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெ.ஊத்துப்பட்டியில் திருவிழா நடத்துவது குறித்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று கிராம மக்களுடனான சமாதான கூட்டம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பழனிவேல் தலைமையில் ஒருதரப்பினரும், ஜம்புத்துரைகோட்டை ஊராட்சி துணைத்தலைவர் சிவராமன் தலைமையில் மற்றொரு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், கோவில் திருவிழாவை முதலில் சிவராமன் தரப்பினர் 3 மாதத்திற்குள் தனியாக நடத்த வேண்டும். அதன்பிறகு பழனிவேல் தரப்பினரும், மற்றவர்களும் என தனித்தனியாக திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் திருவிழாவை தொடங்குவதற்கு முன்பு சாமி கும்பிடும் முறைகளை வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளிடம் முழு விவரத்துடன் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவத்தாய், வருவாய் ஆய்வாளர் பிரேமலதா, கிராம நிர்வாக அலுவலர் முத்துசரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்