சாலை வசதி கேட்டு கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சாலை வசதி கேட்டு கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.;

Update:2022-12-30 00:15 IST

பொள்ளாச்சி

சாலை வசதி கேட்டு கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஜப்தி நோட்டீசு

பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சிக்கு உல்லாச நகரில் சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. இந்த நிலையில் வீட்டு வரி உள்பட பல்வேறு வரிகள் செலுத்தவில்லை என்றால் ஜப்தி செய்யப்படும் என்று பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் நேற்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

உல்லாச நகரில் வசிக்கும் மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக பேரூராட்சிக்கு வரி செலுத்தி வருகிறோம். ஆனால் சாலை வசதி, குடிநீர், வடிகால், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காததால் வரி செலுத்த உடன்பாடு இல்லை. உல்லாச நகரில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்பட்சத்தில் பேரூராட்சி வரி செலுத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நடவடிக்கை

இதை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கூறியதாவது:-

அரசின் விதிமுறைகளின்படி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. பேரூராட்சியில் பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உல்லாச நகரில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் பேரூராட்சிக்கு வரியை செலுத்தி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்