பொள்ளாச்சியில் இருந்து சர்க்கார்பதிக்கு பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி

பொள்ளாச்சியில் இருந்து சர்க்கார்பதிக்கு சீரான பஸ் வசதி இல்லாததால் கடும் அவதிப்படுகின்றனர். இதன் காரணமாக சர்க்கார்பதியில் இருந்து சேத்துமடைக்கு 7 கி.மீ. தூரம் நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.;

Update:2023-03-03 00:15 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் இருந்து சர்க்கார்பதிக்கு சீரான பஸ் வசதி இல்லாததால் கடும் அவதிப்படுகின்றனர். இதன் காரணமாக சர்க்கார்பதியில் இருந்து சேத்துமடைக்கு 7 கி.மீ. தூரம் நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது.

சீரான பஸ் வசதி

பொள்ளாச்சி அருகே வனப்பகுதியில் உள்ள சர்க்கார்பதியில் மலைவாழ் மக்கள், மின்வாரிய, பொதுப்பணித்துறை குடியிருப்பில் ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகளின் வசதிக்காக சர்க்கார்பதியில் இருந்து பொள்ளாச்சிக்கு தினமும் காலை 7.15 மணி, 10 மணி, பகல் 1 மணி, மாலை 3 மணி, 6.10 மணி, இரவு 8 மணிக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

பொள்ளாச்சியில் இருந்து இரவு 10 மணிக்கு சர்க்கார்பதிக்கு வரும் பஸ்சை, அங்கேயே நிறுத்தி விட்டு, மீண்டும் மறுநாள் காலை 6 மணிக்கு பொள்ளாச்சிக்கு இயக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு அந்த பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது பஸ் போக்குவரத்து சீரான பிறகும் கூட சீரான பஸ் வசதி இல்லாமல் கடும் அவதிப்படுகின்றனர். சேத்துமடை, பழைய சர்க்கார்பதி பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மாலை நேரங்களில் பள்ளி முடிந்து சேத்துமடைக்கு நடந்து வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

வனவிலங்குகள் நடமாட்டம்

பொள்ளாச்சியில் இருந்து சர்க்கார்பதிக்கு தினமும் சுமார் 7 முறை பஸ் இயக்கப்பட்டு வந்தது. கொரோனாவிற்கு பிறகு தற்போது காலை 7.15 மணி மற்றும் மாலை 6.10 மணி ஆகிய 2 முறை மட்டும் தான் பஸ் இயக்கப்படுகிறது. பொள்ளாச்சிக்கு வர வேண்டும் என்றால் சர்க்கார்பதியில் இருந்து சேத்துமடை 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் வர வேண்டிய உள்ளது.

காலை நேரத்தில் பள்ளிக்கு செல்ல பஸ் வசதி உள்ளது. ஆனால் மாலையில் பள்ளி முடியும் நேரம் பஸ் வசதி கிடையாது. இதனால் அடர்ந்த வனப்பகுதி வழியாக சர்க்கார்பதிக்கு நடந்து வரும் நிலை உள்ளது. மாலை நேரங்களில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் சாலையில் இருப்பதால் கடும் சிரமப்படுகின்றனர்.

போராட்டம் நடத்த முடிவு

சேத்துமடையில் இருந்து சர்க்கார்பதிக்கு தனியார் வாகனங்களில் வந்து செல்ல ரூ.350 வரை வாடகை கேட்கின்றனர். இதனால் சாதாரண மக்களால் வாடகை கொடுக்க முடியவில்லை. சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் ஒரு நாளைக்கு 3 ஷீப்ட் வேலை நடக்கிறது. இதனால் பணிக்கு வரும் ஊழியர்களும் பஸ் வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து கோவைக்கு சென்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை சந்தித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகளிடம் கேட்டால் சாலை மோசமாக இருப்பதால் பஸ் இயக்க முடியவில்லை என்கின்றனர். கொரோனாவிற்கு முன் இருந்த சாலை தான் தற்போது உள்ளது. எனவே அதிகாரிகள் வேண்டும் என்றே சர்க்கார்பதிக்கு பஸ் இயக்க தயக்கம் காட்டுகின்றனர். எனவே மீண்டும் வழக்கம் போல் சர்க்கார்பதிக்கு பஸ் இயக்கவில்லை என்றால் போராட்டம் நடத்த மக்கள் திட்டமிட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்