திண்டிவனம் அருகே சுடுகாட்டுக்கு பாதை கேட்டு கிராம சபை கூட்டத்தில் போராட்டம் நடத்திய மக்கள்; நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அறிவிப்பு

திண்டிவனம் அருகே சுடுகாட்டுக்கு பாதை கேட்டு கிராமசபை கூட்டத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-10-03 00:15 IST

திண்டிவனம், 

பொதுமக்கள் போராட்டம்

திண்டிவனம் அருகே உள்ள கருவம்பாக்கத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்தாஸ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் பன்னீர்செல்வம், துணை தலைவர் கிருஷ்ணன், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளுடன் வந்த கிராம மக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அங்குள்ள அம்மன் கோவில் முன்பு நின்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், சுடுகாட்டுக்கு செல்லக்கூடிய பாதையை தனிநபர் ஆக்கிமிப்பு செய்துள்ளதாகவும், அதனை அகற்றி சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

பரபரப்பு

இதை கேட்ட அதிகாரிகள், உங்களது கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரிடம் கூறுவதாகவும், தற்போது கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் கூறினர். அதற்கு கிராம மக்கள், சுடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி செய்து தராவிட்டால் கிராமசபை கூட்டம் மட்டுமல்ல நாடாளுமன்ற தேர்தலையும் புறக்கணிப்போம். ரேஷன் கடைக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனத்தையும் திருப்பி அனுப்புவோம் என்று கூறிவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்