மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

Update: 2023-10-09 18:45 GMT

கலெக்டரிடம் மனு

நாமக்கல் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கோ தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ள மின் கட்டண உயர்வு, உச்ச நேர மின் கட்டணம் அறிவிப்பு மற்றும் நிலைக் கட்டண உயர்வு போன்ற 5 அம்ச கோரிக்கையை நீக்க வலியுறுத்தி, தமிழக தொழிற்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில், தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டமாக போராட்டங்கள் நடத்தி, எங்களது ஆட்சேபனைகளை தெரிவித்து வருகிறோம்.

430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணம் மற்றும் பரபரப்பு நேர கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பல்வேறு இனங்களில் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால், கடந்த சில மாதங்களாக பல குறு, சிறு தொழில்கள் முடங்கிவிட்டன. பலர் நிறுவனத்தையே மூடிவிட்டு சென்று விட்டனர். பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், மின்சாரத்தை நம்பியே உள்ளது. அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கி வரும் சிறு தொழில்கள், மின் கட்டண உயர்வால் பெரிய பாதிப்பு அடைந்து உள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் தொழில் வளத்தை காக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், தமிழக முதல்-அமைச்சருக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், திருச்செங்கோடு என்ஜினீயரிங் கிரில் ஒர்க் நலச்சங்கத்தினரும் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கூடுதல் பஸ்வசதி

பரமத்திவேலூர் தாலுகா பெரியசோளிபாளையம் ஊராட்சி குமாரசாமிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குமாரசாமிபாளையம் கிராமத்தில் போதிய பஸ்வசதி இன்றி சிரமம் அடைந்து வருகிறோம். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் பஸ்வசதி இல்லாததால் அவதி அடைந்து வருகின்றனர். எனவே எங்கள் பகுதிக்கு கூடுதல் பஸ் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

பூ போடும் நிகழ்ச்சிக்கு அனுமதி

சேந்தமங்கலம் மாவிலர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சேந்தமங்கலத்தில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவில் திருவிழாவின் போது, காப்புகட்டும் நாள் அன்று, மாவிலர் தெருவில் இருந்து, சாமி அலங்காரம் அமைத்தும், பூ எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்று, சாமிக்கு பூ போடும் நிகழ்ச்சி நடத்தப்படும். இதை 20 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் சமூகத்தினர் செய்து வருகின்றனர். இந்தநிலையில், அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதனால் திருவிழாவின் போது, முதல் காப்பு கட்டும் நாளில், சாமிக்கு பூ போடும் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்த எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்