கைதிக்கு கஞ்சா, செல்போன் வழங்கிய போலீஸ் ஏட்டு

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த கைதிக்கு கஞ்சா, செல்போன் வழங்கிய போலீஸ் ஏட்டு குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Update: 2022-12-10 19:30 GMT

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த கைதிக்கு கஞ்சா, செல்போன் வழங்கிய போலீஸ் ஏட்டு குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சிகிச்சையில் கைதி

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவரை ஒரு கொலை வழக்கில் எண்ணூர் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த அக்டோபர் மாதம் சிறையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் உயர் பாதுகாப்பு அறையில் (ஸ்டிராங் ரூம்) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கஞ்சா பறிமுதல்

அந்த அறையில் ஆயுதப்படை போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மணிகண்டன் அங்கு செல்போனில் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டனிடம் இருந்து செல்போன் மற்றும் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.

                            

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில், கைதி மணிகண்டனுக்கு போலீஸ் ஏட்டு ஒருவர் செல்போன், கஞ்சா வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 4 போலீசார் வேறு பணிக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் ஆயுதப்படையில் இருந்து வேறு 4 போலீசார் வரவழைக்கப்பட்டு அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே கைதிக்கு கஞ்சா, செல்போன் வழங்கிய ஏட்டு குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அதாவது, கைதிக்கு கஞ்சா கொடுக்க பணம் கைமாறப்பட்டதா?, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா தலைமையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்