சோலையாறு அணையில் மின் உற்பத்தி தொடக்கம்

நீர்மட்டம் 132 அடியை தாண்டியதால் சோலையாறு அணையில் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.

Update: 2023-07-30 20:45 GMT

வால்பாறை

நீர்மட்டம் 132 அடியை தாண்டியதால் சோலையாறு அணையில் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.

சோலையாறு அணை

வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக மழையின் தீவிரம் குறைந்து விட்டது. எனினும் ஆங்காங்கே பெய்து வரும் லேசான மழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து உள்ளது. மேலும் சோலையாறு அணைக்கும் தண்ணீர் வரத்து ஏற்பட்டு வருகிறது. இது தவிர மேல்நீராறு அணையில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைந்து 860 கன அடி தண்ணீரும், கீழ் நீராறு அணையில் இருந்து 116 கன அடி தண்ணீரும் சோலையாறு அணைக்கு சென்று வருகிறது.

இதன் காரணமாக 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து 132 அடியை தாண்டியது. சோலையாறு அணைக்கு வினாடிக்கு 1,560 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

மின் உற்பத்தி

இதைத்தொடர்ந்து சோலையாறு மின் நிலையம்-2 இயக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்திக்கு பிறகு 434 கன அடி தண்ணீர் ஒப்பந்தப்படி கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மேல் நீராரில் மட்டும் 2 மி.மீ. மழை பெய்து உள்ளது. வேறு எங்கும் மழை பெய்யவில்லை.

வால்பாறை பகுதியை பொறுத்தவரை கனமழை பெய்ய வேண்டிய நிலையில், மழை பெய்யாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் ஒப்பந்தப்படி கேரளாவிற்கு தண்ணீர் கொடுக்க வேண்டிய நிலை இருப்தால், பரம்பிக்குளம் அணைக்கு போதிய தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் 

Tags:    

மேலும் செய்திகள்