ஆண்கள் டாஸ்மாக்கில் கொடுக்கும் பணத்தை, பெண்களுக்கு உரிமைத் தொகையாக அரசு வழங்கி வருகிறது - சவுமியா அன்புமணி
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று சவுமியா அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.;
தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிக்கு சென்ற அவர், முருகன் கோவிலில் வழிபாடு செய்தார். பின்னர் ஆர்.கே. பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண்கள் மத்தியில் பெண்களுக்கான உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திருத்தணியில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் புழங்குகிறது. ஏற்கனவே மூன்று தலைமுறையை இந்த ஆட்சியாளர்கள் போதைக்கு அடிமையாக்கி விட்டார்கள். தற்போது இளம் தலைமுறைமையும் போதைக்கு அடிமையாக்கி வருகிறார்கள். சமுதாயத்தில் பல்வேறு சமூக சீர்கேடுகள், பாலியல் அத்துமீறல்கள், வன்கொடுமைகள் நடைபெறுவதற்கு கஞ்சா போதைதான் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது.
சமுதாயத்தில் சீர்கேடுகள் அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் கொடூரர்களுக்கு நீதித்துறை கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
மக்கள் கேட்ட நல்ல திட்டங்களை எல்லாம் கொண்டு வராமல் யாரும் கேட்காத டாஸ்மாக் கடைகளை திமுக அரசு திறக்கிறது. தமிழ்நாட்டு ஆண்கள் குடித்துவிட்டு டாஸ்மாக்கில் கொடுக்கும் பணத்தை, பெண்களுக்கு உரிமைத் தொகையாக தமிழக அரசு கொடுக்கிறது. பெண் குழந்தைகளை வெளியில் அனுப்பிவிட்டு, பெற்றோர்கள் பயத்துடன் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது.
தமிழ்நாட்டில் 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை. அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லை. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் சிந்தித்து நல்ல முடிவை எடுத்து வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மதுபோதை இல்லா தமிழ்நாடு உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.