20 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது

10-ம் வகுப்பு வரை படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-10 19:00 GMT

வீட்டிலேயே மருத்துவம்

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம், கோனார் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 59). இவர் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டிலேயே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்படி பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அன்பழகனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மருந்து, மாத்திரைகள், ஸ்டெதஸ்கோப் (இதய துடிப்பு மானி) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

20 ஆண்டுகளாக...

மேலும் அன்பழகனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அன்பழகன் உணவு குழாய் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது அதற்காக அவர் திருச்சி, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அடிக்கடி சிகிச்சைக்காக சென்று வந்த போது, அங்குள்ள டாக்டர்கள் கொடுக்கும் மருந்துகளை வைத்து மருத்துவம் கற்று கொண்டு தான் கடந்த 20 ஆண்டுகளாக வீட்டிலேயே மருந்து, மாத்திரைகளை வைத்து வீடு தேடி வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அன்பழகனை போலீசார் சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்