தனியார் நிறுவன ஊழியர் கோவிலில் தூக்குப்போட்டு தற்கொலை

வாழப்பாடி அருகே ஆன்லை சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் கோவிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-09 19:30 GMT

வாழப்பாடி:-

வாழப்பாடி அருகே ஆன்லை சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் கோவிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனியார் நிறுவன ஊழியர்

ஓமலூரை அடுத்த பூமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணிமுத்து (வயது 40). இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு கிஷோர், சரண் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மணிமுத்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் மணிமுத்து தினமும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதில் அவர் பணத்தை இழந்ததால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

கோவிலில் தற்கொலை

இதனிடையே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி சேஷன்சாவடி சங்கர் பார்க் அருகில் வனப்பகுதியில் உள்ள பஞ்சுமாயி கோவிலுக்கு மணிமுத்து நேற்று மாலை வந்துள்ளார். பின்னர் கோவிலில் யாரும் இல்லாததை அறிந்த அவர், கோவில் மேற்கூரையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று, மணிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே மணிமுத்து சட்டைப்பையில் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது குடும்பத்தினர், உறவினர்கள் எனது உடலை பார்த்த பிறகு, அரசு ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுத்து விடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்