தனியார் நிறுவன ஊழியர் கொலை: திருப்பூர் போலீசில் 3 பேர் சரண்

தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் 3 பேர் திருப்பூர் தாராபுரம் போலீசில் சரணடைந்தனர்.

Update: 2023-08-05 18:47 GMT

தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் 3 பேர் திருப்பூர் தாராபுரம் போலீசில் சரணடைந்தனர்.

தனியார் நிறுவன ஊழியர் கொலை

நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 36). இவருக்கு மாரிச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். நெல்லை குறுக்குத்துறையை கடந்து கருப்பந்துறை ரோட்டில் சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து ஓடஓட விரட்டி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

முன்விரோதம்

இந்த கொலை தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணை யில் மாயாண்டிக்கும், அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயாண்டியின் வீட்டு முன்பு இருந்த கிரைண்டரை அதே பகுதியை சேர்ந்த சுடலை மகன் கண்ணன் (20) என்பவர் தூக்கி புதருக்குள் வீசி விட்டார். இதனால் மாயாண்டி கோபத்தில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை கண்ணனின் தந்தை சுடலை, மாயாண்டி வசிக்கும் தெரு வழியாக சுக்கு காபி வியாபாரம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது மாயாண்டி அவரிடம் கிரைண்டர் திருட்டு போனது குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கண்ணனிடம் பேசி கண்டிக்குமாறு கூறியுள்ளார். உடனே சுடலையும் சம்மதம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

போலீசில் சரண்

இதைத்தொடர்ந்து அவர் தனது வீட்டுக்கு வந்து மகனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் மாயாண்டியை கொலை செய்தது தெரியவந்தது. அதேநேரத்தில் கொலை நடந்த அடுத்த நிமிடத்திலேயே அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். திருப்பூருக்கு பஸ் ஏறி இரவோடு இரவாக சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அங்குள்ள தாராபுரம் போலீஸ் நிலையத்தில் கண்ணன், அவரது நண்பர்கள் அதே ஊரைச் சேர்ந்த கந்தன் மகன் சுடலைமணி (22), வெங்கடேசன் மகன் சுடலை மணிகண்டன் (21) ஆகியோர் சரண் அடைந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடலை வாங்க மறுப்பு

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் அழைத்து வருவதற்காக தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கிருந்து கண்ணன், சுடலை மணி, சுடலை மணிகண்டன் ஆகிய 3 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் நெல்லை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மாயாண்டியின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்