மின் இணைப்பை துண்டிக்காததால் மாணவர் விடுதியை இடிப்பதில் சிக்கல்
மின் இணைப்பு துண்டிக்காததால் மாணவர் விடுதியை இடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.;
மின் இணைப்பு துண்டிக்காததால் மாணவர் விடுதியை இடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஆதிதிராவிடர் நல விடுதி
கோவை பாலசுந்தரம் சாலையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி கட்டிடம் உள்ளது. இங்கு அரசு கல்லூரிக ளில் படிக்கும் மாணவர்கள் தங்கி இருந்தனர். 30 ஆண்டு பழமை யான விடுதி கட்டிடம் உறுதித்தன்மை இழந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டது.
எனவே அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு துறை (தாட்கோ) முடிவு செய்தது. இதனால் அங்கு தங்கி இருந்த மாணவர்கள் அருகே உள்ள விடுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.
இடிக்கும் பணி
இதையடுத்து மாணவர் விடுதியை இடித்து அகற்றுவதற்கான பணிகள் கடந்த வாரம் தொடங்கின. இதில் அனைத்து அறைகளி லும் கதவுகள், ஜன்னல் கம்பி, பலகைகள் அகற்றப்பட்டன. ஆனால் விடுதியில் மின் இணைப்பு இன்னும் துண்டிக்கப்படாமல் உள்ளது. இதனால் விடுதி கட்டிடத்தை இடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து தாட்கோ அதிகாரிகள் கூறுகையில், பாலசுந்தரம் சாலையில் உள்ள மாணவர்கள் விடுதியின் பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதில் தரைத்தளம், முதல் மற்றும் 2-வது தளம், மற்றும் விளையாட்டு மைதானம், நூலகம், படிக்கும் அறை, சாப்பாட்டு கூடம் அமைக்கப்பட உள்ளது.
மின்இணைப்பை துண்டித்தால் பழைய விடுதி கட்டிடத்தை இடித்து அகற்றும் பணி நடைபெறும் என்றனர்.
மின் கட்டண பாக்கி
ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், பழைய விடுதி கட்டிடத்திற்கு ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் மின்கட்டண பாக்கி உள்ளது. அதை செலுத்துவதற்கு நிதி வந்ததும் பாக்கியை செலுத்தி விடுவோம் என்றனர்.