கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் மறியல்

அறந்தாங்கி அருகே வைரிவயல் கண்மாயில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-10-11 17:52 GMT

வைரிவயல் கண்மாய்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தில் வைரிவயல் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் 500 ஏக்கர் வரை விவசாய நிலங்கள் தண்ணீர் பெறுகின்றன. மழைக்காலங்களில் அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள பெரிஞ்சாங்குளம், நெடுங்குளம், அருகன்குளம், வண்ணான்குளம் ஆகிய குளங்களிலிருந்து நிரம்பிய தண்ணீர் வைரிவயல் கண்மாய்க்கு வந்தடையும்.

ஆனால் நகர்பகுதியில் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், அங்கிருந்து வருகின்ற தண்ணீரில் சாக்கடை கழிவு நீர் கலப்பதாக கூறப்படுகிறது.

கோழிக்கழிவுகள் கொட்டப்படுகிறது

குடிநீருக்காக பராமரித்து வந்த கண்மாயில் தற்போது வெங்காயத்தாமரையும் படர்ந்து உள்ளது. அதோடு மட்டுமல்லாது நகர்புறத்திலிருந்து சேமிக்கப்படுகின்ற குப்பைகள் மற்றும் கோழிக்கழிவுகள் ஆகியவையும் இக்கண்மாயில் கொட்டப்படுகிறது.

இந்த கண்மாய் தண்ணீரை பயன்படுத்துவதால் ெதாற்றுநோய்கள் ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டிய தண்ணீர், கழிவுநீராக மாறியதால் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் நிலங்களில் விவசாயம் செய்யாமல் தரிசு நிலமாக கிடப்பில் போட்டுள்ளனர்.

சாலை மறியல்

இதுகுறித்து அறந்தாங்கி தாசில்தார் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தியும், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அறந்தாங்கி வைரிவயல் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் வைரிவயல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்