முகக்கவசம் அவசியம் என்பதை பொதுமக்கள் உணரவேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்புக்கு முகக்கவசம் அவசியம் என்பதை உணரவேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-06 05:14 GMT

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு ஆஸ்பத்திரியில், தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகைமருந்து கழகம் (டாம்ப்கால்) தயாரித்துள்ள 6 அழகுசாதன பொருட்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அறிமுகப்படுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

'டாம்ப்கால்' ஏற்கனவே 175 வகையான மருந்துகளை தயாரித்து வினியோகித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொடுகு நீக்கி கூந்தல் தைலம், பொடுகு நீக்கி ஷாம்பூ, மூலிகை கூந்தல் பொடி, மூலிகை முகப்பொலிவு பொடி, கூந்தல் தைலம் பிளஸ், மூலிகை சோப்பு என்ற 6 வகையான அழகுசாதன பொருட்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மூலிகை சன்ஸ்கிரீன் லோசன், மூலிகை பூஞ்சை வலி நிவாரண கிரீம், மூலிகை வலிநிவாரண கிரீம், செறிவூட்டப்பட்ட கூந்தல் தைலம், மூலிகை ஹேர் டை போன்றவையும் விரைவில் கொண்டுவரப்படும்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த வகை கொரோனா தொற்று ஆஸ்பத்திரிகளில் மட்டும்தான் வேகமாக பரவும் தன்மை உடையதாக இருக்கின்றது. எனவே அங்கு முகக்கவசம் கட்டாயம் என்று அறிவுறுத்தியிருக்கிறோம். ஆனால் பாதுகாப்பு அவசியம் கருதி முகக்கவசங்களை எப்போதும் அணிந்திருப்பது தவறில்லை.

நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதற்கு முகக்கவசங்கள் அவசியம் என்பதை பொதுமக்களும் உணர்ந்து அதிகம் கூட்டம் கூடும் இடங்களில் முகக்கவசங்கள் அணிவது மிகவும் நல்லது.

தற்போதைய கொரோனா தொற்று குறித்து நாம் பெரிய அளவில் பதற்றம், அச்சப்பட வேண்டியதில்லை. இந்த பாதிப்பு வந்தால் 5 நாட்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளவும், டாக்டர்களின் ஆலோசனைகளை பெற்று மருந்துகள் எடுத்துக்கொள்ளவும் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ், டாம்ப்கால் பொது மேலாளர் மோகன்ராஜ், சென்னை யுனானி மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் முஸ்தாக் அகமது, இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்