கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் இன்றி தவிக்கும் பொதுமக்கள்

கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் இன்றி தவிக்கும் பொதுமக்கள்

Update: 2023-06-22 19:44 GMT

கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேதமடைந்து பயன்படாமல் உள்ள குடிநீர் தொட்டியால் பொதுமக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.

அரசு ஆஸ்பத்திரி

தமிழகத்தில் பெரும்பாலான அரசு ஆஸ்பத்திரிகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு இணையான சிகிச்சைகளை அளித்து வருகின்றன. இதனால் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதன்படி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியும் பொதுமக்களுக்கு சிறந்த முறையில் தரமான சிகிச்சை அளித்து வருகிறது. இதன் காரணமாக கும்பகோணம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

சேதமடைந்த குடிநீர் தொட்டி

இவ்வாறு வரும் பொதுமக்களின் நலன் கருதி ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆங்காங்கே தேவையான இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக புறநோயாளிகள் பிரிவு அருகே ரூ.5 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.

தற்போது இந்த குடிநீர் தொட்டிகள் முறையான பராமரிப்பின்றி, சேதமடைந்து காணப்படுகிறது. அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தின் முன்பு உள்ள ஒரு குடிநீர் குழாய் உடைந்து உள்ளது. இதன்காரணமாக சிகிச்சைக்காக வருபவர்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.

நடவடிக்கை

மேலும், சிகிச்சைக்கு வருபவர்களுக்காக அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் அங்குள்ள கைப்பம்பில் தண்ணீர் எடுத்து சுற்றுச்சுவர், அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் கேன் மற்றும் பாத்திரத்தில் நிரப்பி வைக்கின்றனர். இவை சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருப்பது கேள்விக்குறியான ஒன்று. இதனால் அவற்றை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதில்லை.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் குடிநீர் தொட்டிகளை சீரமைத்து சிகிச்சைக்கு வருபவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்