ராக்கிங் தடுப்பு சட்டம் விழிப்புணர்வு முகாம்
ராக்கிங் தடுப்பு சட்டம் விழிப்புணர்வு முகாம்;
முத்தூர்,
நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ராக்கிங் தடுப்பு சட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் சே.ப. நசீம் ஜான் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர், பேராசிரியர் தேவராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.
முகாமில் காங்கயம் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர்கள் விஜயலட்சுமி, கார்த்திக் குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கல்லூரி மாணவர்கள் ராக்கிங் செய்வதால் ஏற்படும் பின் விளைவுகள், இளம் வயது திருமணங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள், தவிர்க்கும் வழிமுறைகள், திருமண வயது அடைந்தவர்கள் பெற்றோர்கள் அறிவுரை சம்மதத்துடன் குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதன் அவசியம், ராக்கிங் செய்வதை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்தி நன்கு பயிலும் வழிமுறைகள்பற்றி விரிவாக விளக்கி கூறினார்கள்.
முகாமில் காங்கயம் சட்ட விழிப்புணர்வு குழு வழக்கறிஞர்கள் எஸ்.ஜெகதீசன், ஆர்.பிரகாஷ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி கணிதவியல் துறை தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.
------------------