ஆசனூா் அருகே பலத்த மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்ற காட்டாற்று வெள்ளம்- 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஆசனூர் அருகே பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் சென்றது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-05-06 23:15 GMT


ஆசனூர் அருகே பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் சென்றது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழை

தாளவாடி பகுதியில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 3 மணி அளவில் மேகமூட்டம் தோன்றியது. பின்னர் பலத்த மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக திம்பம், கோட்டாடை, ஒசட்டி, தேவர்நத்தம், ஆசனூர் ஆகிய பகுதியில் 1 நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இந்த மழையால் ஆசனூரில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் அரேபாளைம் அருகே உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது.

போக்குவரத்து பாதிப்பு

இதன்காரணமாக அந்த வழியாக பஸ் உள்பட எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பஸ்சில் வந்த பயணிகள் தங்களுடைய கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். 1 மணி நேரத்துக்கு பின்னர் காட்டாற்றில் வெள்ளம் வடிந்ததை தொடர்ந்து போக்குவரத்து தொடங்கியது.

தரைப்பாலம் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அங்கு புதிதாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பின்னர் இரவு 7 மணி அளவில் கெட்டவாடி, தமிழ்புரம், மாதள்ளி மற்றும் வனப்பகுதியில் 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. இதையடுத்து மழை தூறிக்கொண்டே இருந்தது.

அந்தியூர்- கொடுமுடி

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் நேற்று மதியம் 2 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. 3 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 35.40 மில்லி மீட்டர் மழைபெய்தது. இதனால் 33.46 அடியாக கொள்ளளவு உள்ள அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணி அளவில் 25.49 அடியாக இருந்தது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் இல்லை.

இதேபோல் கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சாலைப்புதூர், ஒத்தக்கடை, தாமரைபாளையம், சோளக்காளிபாளையம், வெங்கம்பூர், பெரிய வட்டம், நாகமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை பலத்த மழை பெய்தது.

ஊஞ்சலூர், கொளாநல்லி, நடுப்பாளையம், கொம்பனைப்புதூர், தாமரைப்பாளையம், கருக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் மாலை 6.15 மணிக்கு மிதமான மழை பெய்தது. இந்த மழை 30 நிமிடம் நேரம் வரை நீடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்