நீலகிரில் பலத்த காற்றுடன் மழை: வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன-சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

நீலகிரியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோத்தகிரியில் வீட்டின் மேற்கூரைகள் பறந்தன

Update: 2023-07-28 00:45 GMT

ஊட்டி

நீலகிரியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோத்தகிரியில் வீட்டின் மேற்கூரைகள் பறந்தன

மழை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக ஊட்டி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அணைகள் மற்றும் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வனப்பகுதி முழுவதும் பசுமைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வரை தொடர்ச்சியாக பெய்த மழை நேற்று முதல் சற்று குறைந்தது.

போக்குவரத்து பாதிப்பு

ஆனாலும் தொடரும் மழை காரணமாக மண் ஈரப்பதமாக இருந்ததால் ஒரு சில இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் எல்லிநள்ளி என்ற இடத்தின் அருகிலும், கேத்தி போலீஸ் நிலையம் செல்லும் சாலையில் இரு இடங்களிலும் ரோட்டின் குறுக்கே மரம் விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் மரங்களை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர்.

ஊட்டியில் நேற்று 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு 80 சதவீதமாக இருந்தது. ஒரு வாரத்திற்கு பின்னர் ஊட்டி சுற்று வட்டார பகுதிகள், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வெயில் அடித்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய லேசான சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு முதல் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் இரும்பு குழாய்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்த 2 சிக்னல் கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதில் ஒரு கம்பம் சாலையின் குறுக்கிலும், மற்றொன்று ஆட்டோ ஸ்டேண்ட் பகுதியிலும் விழுந்தது. இரவு நேரத்தில் விழுந்ததால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதே போல கோத்தகிரியிலிருந்து கோடநாடு செல்லும் சாலையில் ஈளாடா பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய மருந்து குடோனின் மேற்கூரை பறந்து சென்று கீழே விழுந்தது.

மேற்கூரைகள் பறந்தன

மேலும் கோத்தகிரி ரைபிள் ரேஞ்ச் அருகே ஷீலா என்பவரது வீட்டின் மேற்கூரை மற்றும் கொணவக்கரை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரைகள் பலத்த காற்றின் காரணமாக பறந்து சென்றது. இதனால் வீடுகள் சேதமடைந்தன. குயின்சோலை குடியிருப்புப் பகுதியில் சுமார் 20 க்கும் மேற்பட்ட மரங்கள் வீடுகளின் மேல் சரிந்து விலும் நிலையில் ஆபத்தாக உள்ளதால் வருவாய்த்துறையினர் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அந்த அபாயகரமான மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீடுகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு 4,100 ரூபாய் நிவாரண தொகை வழங்குவது வழக்கம். ஆனால் மேற்கூரை பறந்து சென்று வீடுகள் சேதமடைந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்க இயலாது என வருவாய்த்துறையினர் மறுத்து விட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்தநிலையில் நேற்று காலை முதல் கோத்தகிரி பகுதியில் சாரல் மழை நின்று காற்று மற்றும் வெயிலுடன் கூடிய சீதோஷ்ண நிலை நிலவியது.

மழை அளவு

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டர் அளவில் வருமாறு:-

ஊட்டி 13, நடுவட்டம் 49, கிளன்மார்கன் 65, அவலாஞ்சி 44, அப்பர் பவானி 30, கூடலூர் 18, தேவாலா 37, பந்தலூர் 15, சேரங்கோடு 18.

Tags:    

மேலும் செய்திகள்