தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து 850 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து 850 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

Update: 2023-09-14 04:22 GMT

சென்னை:

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வார இறுதி நாட்கள் (16, 17-ந் தேதி), விநாயகர் சதுர்த்தி (18-ந் தேதி) என தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், சுபநிகழ்ச்சிகளுக்கும் சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 15-ந் தேதி (நாளை) தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக 650 பஸ்களும், 16-ந் தேதி கூடுதலாக 200 பஸ்களும் இயக்கப்படுகின்றன. கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1,250 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

18-ந் தேதி (திங்கட்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு பஸ்களை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்