ஊரப்பாக்கம் ஜெகதீஷ்நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி

ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

Update: 2022-12-14 05:22 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பெய்த மழையின் காரணமாக ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர் பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அந்த பகுதியில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டுவிட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி உள்ளனர். ‌மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-

கடந்த ஆண்டு ஜெகதீஷ் நகர் பகுதிகளில் ஒரு வீட்டின் அஸ்திவாரம் பகுதிக்குள்ளே தண்ணீர் புகுந்து மற்றொரு புறத்தில் வெளியே வந்தது. மாவட்ட நிர்வாகம் எடுத்த தொடர் நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு பாதிப்பு பாதி அளவு குறைந்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்ததால் ஜெகதீஷ்நகர் பகுதியில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வீட்டுக்குள் விஷ பூச்சிகள் பாம்புகள் வருகின்றன. மேலும் அவசர தேவைக்கு இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இனிவரும் காலங்களில் ஜெகதீஷ் நகர் பகுதியில் மழைநீர் வீடுகளை சுற்றி தேங்காதபடியும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதையும் நிரந்தரமாக தடுப்பதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்