மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்
வால்பாறை -பொள்ளாச்சி ரோடு துளசிங்நகரில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மணல் மூட்டைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;
வால்பாறை
வால்பாறை -பொள்ளாச்சி ரோடு துளசிங்நகரில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மணல் மூட்டைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மண்சரிவு
வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்தது. இதையடுத்து ஜூலை மாதம் முதல் வாரத்தில் மிக கனமழை பெய்தது.
இதனால் வால்பாறை -பொள்ளாச்சி மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக வால்பாறையில் காமராஜர்நகர், எம்.ஜி.ஆர். நகர், சிறுவர் பூங்கா, அண்ணா நகர், சோலையாறு நகர் இடது கரை உள்ளிட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் பாதிக்கப்பட்டன.
பொதுமக்கள் அச்சம்
இந்த நிலையில் வால்பாறை- பொள்ளாச்சி ரோடு துளசிங்நகர் பகுதியில் கடந்த மாதம் 5 -ந் தேதி மண் சரிவு ஏற்பட்டதால் வீடுகள் பாதிக்கப்பட்டன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதை அறிந்த நெடுஞ்சாலை துறையினர் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி உள்ளனர்.
ஆனால் இது நிரந்தர தீர்வு கிடையாது.
எனவே மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர் கட்டி நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லை என்றால் மீண்டும் மழை பெய்யும் போது மண்சரிவு ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த அச்சத்துடன் வசித்து வருவதாக துளசிங்நகர் குடியிருப்பு பகுதி மக்கள் கூறுகின்றனர்.
போக்குவரத்துக்கு இடையூறு
மேலும் மண் சரிவு ஏற்பட்ட இடம் வால்பாறை -பொள்ளாச்சி மெயின் ரோடு என்பதால் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றன.
மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு உள்ள தால் அந்த ரோட்டின் அகலம் குறைந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த ரோட்டில் பொது மக்கள் நடந்து செல்ல இடவசதி இல்லாத நிலை உள்ளது.
எனவே ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக போடப்பட்டு உள்ள மணல் மூட்டைகளை அகற்ற வேண்டும்.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் நிரந்தர தீர்வாக தடுப்புச்சுவர் கட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துளசிங்நகர் மற்றும் காமராஜர் நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.