ஓய்வுபெற்ற அரசு அலுவலர் மனைவியின் சிகிச்சைக்கான தொகையை வழங்க வேண்டும்

காலம் தாழ்த்தி வந்த காப்பீட்டு நிறுவனம்: ஓய்வுபெற்ற அரசு அலுவலர் மனைவியின் சிகிச்சைக்கான தொகையை வழங்க வேண்டும் விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு

Update: 2023-06-07 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் உமாபதி(வயது 70). ஓய்வுபெற்ற அரசு அலுவலரான இவரது மனைவி வாசுகிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவரை சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வாசுகிக்கு புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பின்னர் வீடு திரும்பினார். இவருடைய மருத்துவ சிகிச்சைக்கு செலவான ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 55-ஐ மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பெற்றுத்தருவதற்கு மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் காப்பீட்டு நிறுவனம் மருத்துவ செலவுக்கான காப்பீட்டு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

இதையடுத்து வளவனூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சுப்பிரமணியன் மூலமாக விழுப்புரத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற ஆணையத்தில் உமாபதி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீரா மொய்தீன், அமலா ஆகியோர் விசாரித்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. அதாவது உமாபதி மனைவியின் மருத்துவ செலவான ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 55-ஐ சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். மேலும் சேவை குறைபாடு, மனுதாரருக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.5 ஆயிரமும் உமாபதிக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் எனவும், இந்த உத்தரவை 45 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும், இழப்பீடு தொகையை வழங்க காலதாமதம் ஏற்பட்டால், குறிப்பிட்ட தேதியில் இருந்து வட்டித்தொகையுடன் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்