வருவாய்த்துறை ஊழியர்கள்தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனே வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக துணை தாசில்தார் உள்ளிட்ட பதவி உயர்வு பட்டியல் திருத்தத்தால் பதவி இறக்கம் பெறும் அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்புக்கான ஆணைகளை விரைவில் வழங்கிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அரசு மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகள் மீது உரிய ஆணைகள் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
போராட்டம்
இதன் தொடர்ச்சியாக நேற்று தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் முழுமையாக போராட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 452 வருவாய் துறை அலுவலர்களில் 398 அலுவலர்கள் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதனால் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இங்கு வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணி, நலத்திட்ட உதவிகள், பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டன.
ஓட்டப்பிடாரம்
இதேபோல் ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறையினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாலுகா அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பட்டா மாறுதல், சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.