ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.;
அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் உணவு தானியங்களுக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை விதித்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அதனால் வரிஉயர்வு அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி மொத்த விற்பனையாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள 50 அரிசி ஆலைகளில் சுமார் 25 ஆலைகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதேபோல் 80 சதவீத அரிசி மொத்த விற்பனை கடைகளும் பூட்டிக் கிடந்தன.
கொள்முதல் பணி பாதிப்பு
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு என அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ அரிசி ரூ.5 வரை உயர வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே உணவுப்பொருட்களுக்கு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் அரிசி மொத்த, சில்லரை விற்பனை கடைகள் மூடப்பட்டுள்ளதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.