ரூ.20¾ லட்சம் நலத்திட்ட உதவிகள்; கலெக்டர் வழங்கினார்

ரூ.20¾ லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

Update: 2023-10-11 17:40 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, பிராஞ்சேரி அருகே விழப்பள்ளம் கிராமம், புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். முகாமில், துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து 102 மனுக்கள் பெறப்பட்டு, 95 மனுக்கள் ஏற்கப்பட்டும், 7 மனுக்கள் விசாரணையிலும் உள்ளது. நேற்று நடந்த கூட்டத்திலும் 154 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

இந்த முகாமில், 5 பயனாளிகளுக்கு ரூ.46 ஆயிரத்தில் திருமண உதவித்தொகையும், 9 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்தில் இயற்கை மரண உதவித்தொகையும், 25 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 600-ல் முதியோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய உதவித்தொகைகளும், 5 பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரத்து 149-ல் விவசாய இடுபொருட்களும், 3 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் தோட்டக்கலை இடுபொருட்களும், 13 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் உட்பிரிவு பட்டா மாற்றம் ஆணைகளும், 15 பயனாளிகளுக்கு நத்தா மனைவரி பட்டாக்களும், 4 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் வீட்டுமனை பட்டாக்களும், 6 பயனாளிகளுக்கு சான்றிதழ்களும், 10 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 63 ஆயிரத்து 330 மதிப்பிலான பயிர்க்கடன்களும் என மொத்தம் 95 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்து 74 ஆயிரத்து 79 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில், பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் அதனை பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு கூறப்பட்டது. இந்த நலத்திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பெற்று பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார். முன்னதாக, அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், தனித்துணை கலெக்டர் இளங்கோவன், ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு தலைவர் ரவிசங்கர் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்