மனைவி இறந்த சோகத்தில்மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று விவசாயி தற்கொலை:போடி அருகே பரிதாபம்

போடி அருகே மனைவி இறந்த சோகத்தில் மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-18 18:45 GMT

மனைவி இறந்த சோகம்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நம்பெருமாள்ராஜ் (வயது 49). விவசாயி. இவரது மனைவி நிர்மலா தேவி. இந்த தம்பதிக்கு ராகுல்ராஜ் (15) என்ற மகன் இருந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நிர்மலாதேவி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் நம்பெருமாள்ராஜ் சோகத்தில் இருந்து வந்தார். மாற்றுத்திறனாளியான தனது மகனையும் சரிவர கவனிக்க முடியாமல் மன வருத்தத்தில் இருந்தார்.

மேலும் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் தான் சாகப்போவதாக புலம்பி வந்தார். இந்நிலையில் நம்பெருமாள்ராஜ் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்தார். இதற்கிடையே தான் இறந்து விட்டால் மகன் அனாதையாகி விடுவான் என அவர் எண்ணினார். இதனால் மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

மகனை கொன்று தற்கொலை

இதையடுத்து நேற்று முன்தினம் நம்பெருமாள்ராஜ் விஷ மாத்திரையை வாங்கி வந்தார். அதனை பாலில் கலந்து மனதை கல்லாக்கி கொண்டு தனது மகனுக்கு முதலில் கொடுத்தார். பின்னா் தானும் அதனை குடித்தாா். இதில் அவர் மயங்கி விழுந்து இறந்தார். இதற்கிடையே நம்பெருமாள்ராஜ் வீட்டின் அருகே வசித்து வரும் அவரது தம்பி ஆனந்தகுமார் அங்கு வந்தார். அவர் அண்ணன் இறந்து கிடப்பதையும், அவரது மகன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ராகுல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ராகுல்ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த சோகத்தில் மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்