சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை: போலி தீவிரவாதிகளை மடக்கி பிடித்த கடலோர பாதுகாப்பு படையினர்

தூத்துக்குடியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு கடல்வழியாக தூத்துக்குடி துறைமுகத்துக்குள் நுழைய முயன்ற 10 பேரை கடலோர பாதுகாப்பு போலீசார் மடக்கி பிடித்தனர்.

Update: 2022-06-28 10:19 GMT

தூத்துக்குடி:

கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வபோது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார், தீவிரவாதிகள் போன்று வேடம் அணிந்து முக்கிய இடங்களில் ஊடுறுவ முயற்சி செய்வதும், அவர்களை அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்துவது போன்றும் ஒத்திகை நடத்தப்படுகிறது. ஆபரேசன் ரக்சக், ஆபரேசன் சுரக்சா, ஆபரேசன் பேரிகார்டு, ஆபரேசன் ஹம்லா, ஆபரேசன் சாகர் கவாச் போன்ற பெயர்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று காலை முதல் "சாகர் கவாச்" என்னும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடற்படை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார், கியூ பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்புபடை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக 2 விசைப்படகுகள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே சுற்றித்திரிந்தன. உடனடியாக போலீசார் விரைந்து சென்று அந்த படகுகளை மடக்கினர். ஒரு படகில் 6 பேரும், மற்றொரு படகில் 4 பேரும் இருந்தனர். அதில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் தீவிரவாதிகள் போன்று வேடம் அணிந்து துறைமுகத்தை தாக்க வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து நாளை இரவு 8 மணி வரை இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. இதனால் அனைத்து பாதுகாப்பு துறையினரும் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்